திட்டவட்டமாக நிராகரிப்பதாக இலங்கை அறிவிப்பு...!


ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட, 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்' என்ற தலைப்பிலான தீர்மானத்தை இலங்கை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

ஐக்கிய இராச்சியம், கனடா, ஜேர்மன், மலாவி, மொன்டனீக்ரோ, வடக்கு மசிடோனியா மற்றும் ஐக்கிய நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்ட மேற்படி தீர்மானம் நேற்று முன்தினம் (06) வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தையே இலங்கை திட்டவட்டமாக நிராகரித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நாடு என்ற வகையில் இலங்கை சார்பாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி அறிக்கையை வெளியிட்டதுடன், எதிராக வாக்களிப்பதன் மூலம் இந்தத் தீர்மானத்தை நிராகரிக்குமாறு சபை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

தீர்மானத்தை எதிர்க்கும் இலங்கையின் நிலைப்பாட்டை ஆதரித்து, பாகிஸ்தான் பிரதிநிதிகள் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தனர். 07 நாடுகள் (பொலிவியா, சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் வெனிசுலா) தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்ததோடு, 20 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. தீர்மானத்துக்கு ஆதரவாக 20 நாடுகள் வாக்களித்தன. பாகிஸ்தான், பிரேசில், சீனா, வெனிசுலா, ஜப்பான் மற்றும் கொரியக் குடியரசு ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் வாக்கெடுப்புக்கு முன்னதாக இலங்கைக்கு ஆதரவாக அறிக்கைகளை வெளியிட்டனர்.

இந்தத் தீர்மானமானது அனுசரணையாளர்களின் அரசியல் கருத்துக்களை முன்வைக்கும் நோக்கத்தை பூர்த்தி செய்யக் கூடியதாக இருந்தாலும், அது இலங்கைக்கு வெளிப்படையாக உதவாதென அமைச்சர் சப்ரி சுட்டிக்காட்டினார்.

மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் உருவாக்கப்பட்ட 'வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை' 'நீட்டிக்கவும் வலுப்படுத்தவும்' முயலுகின்ற குறிப்பாக செயற்பாட்டுப் பந்தி 08 இலுள்ள பிரேரணையை அமைச்சர் கடுமையாக எதிர்த்தார். இந்தப் பொறிமுறையானது சபையின் எதிர்பார்க்கப்பட்ட ஆணைக்கு வெளியே உள்ளது. எந்தவொரு இறையாண்மையுள்ள அரசும் அதன் அரசியலமைப்புக்கு முரணாக இயங்கும் மற்றும் அதன் உள்நாட்டு சட்ட செயன்முறைகளின் அர்ப்பணிப்பை முன்கூட்டியே தீர்மானிக்கும் ஒரு வெளிப்புறப் பொறிமுறையின் மேலெழுதலை ஏற்க முடியாது.

இந்தத் தீர்மானத்தின் வரவு செலவுத் திட்டத் தாக்கங்கள் குறித்து பல நாடுகள் ஏற்கனவே தீவிர கவலைகளை எழுப்பியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் நன்கொடையாளர்கள் உட்பட அனைத்து உறுப்பு நாடுகளின் வளங்களில் இது உதவாத மற்றும் தவறான விளைச்சலாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார். இதற்கு நேர்மாறாக, பசி மற்றும் குழந்தை ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தடுப்பதற்காக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் கடுமையான நிதித் தேவைகளை நாங்கள் எதிர்கொள்கிறோமென அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் நிதிக் கொள்கை போன்ற சபையின் கட்டமைப்புக்கு வெளியே உள்ள விடயங்கள் இத் தீர்மானத்திலுள்ள குறிப்புக்களுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி எதிர்ப்புத் தெரிவித்தார். இன்று பல நாடுகள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகளுக்கான தீர்வுகள் சபையின் ஆணை, கருவிகள் அல்லது நிபுணத்துவம் ஆகியவற்றில் காணப்படாதென அவர் மேலும் குறிப்பிட்டார்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

Previous Post Next Post