பங்களாதேஷில் நடைபெற்றுவரும் 7 நாடுகளுக்கு இடையிலான மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரை இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு இலங்கை தகுதி பெற்றுக்கொண்டது.
சில்ஹெட் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற தீர்மானம் மிக்க போட்டியில் நடப்பு சம்பியன் பங்களாதேஷஷ் டக்வேர்த் லூயிஸ் முறைமையில் 3 ஓட்டங்களால் வெற்றி கொண்டதன் மூலம் அரை இறுதி வாய்ப்பை இலங்கை உறுதி செய்துகொண்டது.
இனோக்கா ரணவீர ஓரே ஓவரில் 4 விக்கெட்களை வீழ்த்தி இலங்கை வெற்றி அடைவதற்கு வழிவகுத்தார்.
இதேவேளை, அணித் தலைவி சமரி அத்தபத்து 6ஆவது தொடர்ச்சியான தடவையாக பிரகாசிக்கத்தவறியுள்ளமை அவரை அணியில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமா என விவாதிக்க வைத்துள்ளது.
பெரும்பாலும் ஆசிய கிண்ண கிரிக்கெட் முடிவில் தேர்வுக் குழுவினர் அவரைத் தலைமைப் பதவியிலிருந்தும் அணியிலிருந்தும் நீக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில்ஹெட்டில் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் ஒரு மணி நேரம் ஆட்டம் தடைப்பட்டதால் பங்களாதேஷுக்கு 7 ஓவர்களில் 41 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு போட்டி மத்தியஸ்தர்கள் நிர்ணயிக்கப்பட்டது.
இதற்கு அமைய ஓவருக்கு 6 ஓட்டங்கள் வீதம் பெற வேண்டிய பங்களாதேஷ், நெருக்கடிக்கு மத்தியில் சீரான இடைவெளியில் விக்கெட்ளை இழந்துகொண்டிருந்தது.
இறுதியில் 7 ஓவர்கள் நிறைவில் பங்களாதேஷ் 7 விக்கெட்களை இழந்து 37 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
பங்களாதேஷ் சார்பாக துடுப்பெடுத்தாடிய 9 வீராங்கனைகளில் அணித் தலைவி நிகார் சுல்தானா மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்டினார். அவர் 12 ஓட்டங்களைப் பெற்றார்.
பங்களாதேஷ் இன்னிங்ஸில் 6ஆவது ஓவரை வீசிய இனோக்கா ரணவீர, 1ஆவது, 3ஆவது, 5ஆவது, 6ஆவது பந்துகளில் விக்கெட்களை சரித்து வரலாறு படைந்தார்.
இரண்டு ஓவர்கள் பந்துவீசிய இனோக்கா ரணவீர 7 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார். மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் அவர் பதிவு செய்த அதிசிறந்த பந்துவீச்சு பெறுதி இதுவாகும்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 18.1 ஓவர்களில் 5 விக்கெடகளை இழந்து 83 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டதால் அதன் இன்னிங்ஸ் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இலங்கை துடுப்பாட்டத்தில் நிலக்ஷி டி சில்வா (28 ஆ.இ.), ஹர்ஷித்தா சமரவிக்ரம (18), ஹாசினி பெரேரா (11), காவிஷா டில்ஷாரி (11) ஆகிய நால்வரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
பங்களாதேஷ் பந்துவீச்சில் ருமானா அஹ்மத் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஆடவர் அணியைப் போன்று மகளிர் அணி சாதிக்குமா?
ஒரு மாதத்திற்கு முன்னர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற ஆடவர் ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்த இலங்கை அதன் பின்னர் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வெற்றியீட்டி சம்பியன் பட்டத்தை சுவீகரித்திருந்தது.
மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் இந்தியாவிடம் ஆரம்பப் போட்டியில் தோல்வி அடைந்த இலங்கை அதன் பின்னர் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் வெற்றிபெற்று அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஆடவர் போட்டியில் போன்றே மகளிர் போட்டியிலும் கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானை செவ்வாய்க்கிழமை (11) எதிர்கொள்ளவுள்ள இலங்கை, அரை இறுதி, இறுதிப் போட்டிகளிலும் வெற்றிபெற்று ஆசிய கிண்ணத்தை முதல் தடவையாக சுவீகரிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Post a Comment