அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வரி திருத்தச் சட்டமூலம் நடுத்தர வருமானம் பெறும் மக்களை கடுமையாக பாதிக்கும்.
எனவே, அதற்கு எதிர்க்கட்சி ஒருபோதும் ஆதரவு வழங்காது. மாறாக, வரி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், மக்களுடன் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (ஒக் 27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தாங்கிக்கொள்ள முடியாத வரிச் சுமையினை நாட்டு மக்கள் மீது சுமத்துவதற்கு முயற்சிக்கிறார்.
தற்போது நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள வரிக் கொள்கை தனியார் மற்றும் அரச தொழில் புரியும் நபர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.
2019ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு பொருட்களின் விலைகள் இரு மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், வருமானம் அதே நிலையில் உள்ளது.
செலவுகள் அதிகரித்துள்ளன. இதற்கு மேலதிகமாக வரியினை அதிகரிப்பதன் காரணமாக நாட்டு மக்களுக்கு பசியில் மாத்திரமன்றி, பிள்ளைகளை பாடசாலைக்கு கூட அனுப்ப முடியாத நிலை உருவாகும்.
நடுத்தர வருமானம் பெறும் தரப்பினர் வரியினை செலுத்த முடியாமல், அதற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடுவார்கள் என்பது உறுதியாகும்.
குறித்த வரி சட்டமூலம் வர்த்தமானியில் மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளது. சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
நாம் இதற்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் வாக்களிக்க மாட்டோம். இந்த சட்டமூலத்தை தோல்வியடைச் செய்ய நடவடிக்கை எடுப்போம்.
இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், மக்களுடன் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக போராடுவோம்.
யால சரணாலய விவகாரம் தொடர்பில் அரச தலையீடின்றி விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
நாடு இன்று பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் சர்வதேச நாடுகள் இலங்கை தொடர்பில் உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருகிறது.
மக்கள் துன்பத்தில் வாடும்போது, அதிகாரத்தில் உள்ளவர்களின் புதல்வர்கள் இவ்வாறு நடந்துகொள்ளும்போது சர்வதேச நாடுகளின் மத்தியில் இலங்கை தொடர்பில் தவறான அபிப்பிராயம் உருவாகும்.
இதனுடன் தொடர்புடையவர்களுக்கு விசாரணைகளை முன்னெடுத்து, தண்டனை வழங்க வேண்டும். தண்டனை வழங்கவில்லை என்றால், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றார்.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
Post a Comment