அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி எதிராக உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வரித் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என அறிவிக்குமாறு அதில் கோரப்பட்டுள்ளது.
ஆடைத்தொழிற்சாலையொன்றில் பொது முகாமையாளராக கடமையாற்றும், ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த யு.எஸ்.ரணவீர என்பவரே குறித்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.
இந்த மனுவில் சட்டமா அதிபர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
தாம் வரி செலுத்துபவர் எனவும், உத்தேச சட்டமூலத்தின் மூலம் நபர் ஒருவரின் மாதாந்த வரிக்கு உட்பட்ட வருமான எல்லையை ரூ. 250,000 இலிருந்து ரூ. 100,000 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் மீது செலுத்த முடியாத அளவில் வரிச்சுமை சுமத்தப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாவதாகவும், மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் ஏற்றுமதி, உள்ளுர் கைத்தொழில், அபிவிருத்தி நடவடிக்கைகள் போன்ற துறைகள் தமது தைரியத்தை இழக்க நேரிட்டுள்ளதாகவும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசாங்கம் உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலத்தை இம்மாதம் 21 ஆம் திகதி பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கியுள்ளதாகவும், குறித்த உத்தேச சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விதிகள், அரசியலமைப்பின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள, மக்களின் நலன், சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் கடப்பாட்டை கடுமையாக மீறுவதாக மனுதாரர் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், குறித்த உத்தேச சட்டமூலத்தின் 15, 16, 22, 29, 36, 39 ஆகிய பிரிவுகள் அரசியலமைப்பை முழுமையாக மீறுபவையாக உள்ளதாக மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, குறித்த உத்தேச சட்டமூலத்தை நிறைவேற்ற, பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடனும், சர்வஜன வாக்கெடுப்பு மூலமும் நிறைவேற்ற வேண்டுமென தீர்ப்பளிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த சட்டமூலம் அண்மையில் வர்த்தமானிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment