இலங்கைக்கான நீடித்த கடனுதவி செயற்திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் சபை அனுமதி வழங்கவேண்டுமெனில், அதற்கு முன்னதாக கடன் மறுசீரமைப்பு, கடன் ஸ்திரத்தன்மை தொடர்பான உத்தரவாதம் உள்ளடங்கலாக இலங்கை அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவேண்டிய விடயங்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் ஆன்-மேரி கல்ட் மீள வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டம் தொடர்பில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
இலங்கை தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றது. அதுமாத்திரமன்றி இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து நாம் மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றோம்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் குறிப்பாக வறிய மற்றும் பின்தங்கிய சமூகப் பிரிவினர் உள்ளடங்கலாக இலங்கை மக்கள் முகங்கொடுத்திருக்கும் பாதிப்புக்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கு நாமனைவரும் ஒன்றிணைந்து மிக விரைவாக செயற்படமுடியும் என்று எதிர்பார்க்கின்றோம்.
அந்த வகையில் கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி இலங்கையுடனான உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கின்றது.
இருப்பினும், தற்போது இலங்கையின் கடன் நிலவரம் உறுதிப்பாடற்ற நிலையில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இலங்கைக்கு கடனுதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் சபை அனுமதி வழங்க வேண்டுமானால், அதற்கு குறிப்பாக இரு நிதியியல் ரீதியான உத்தரவாதங்களை பெறவேண்டியிருக்கின்றது.
முதலாவதாக இலங்கையின் கடன் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதாக கடன் வழங்குநர்கள் உத்தரவாதம் அளிக்கவேண்டும்.
இரண்டாவதாக தனியார் கடன்களை கையாள்வதற்கு செயற்திறனானதும் நம்பத் தகுந்ததுமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்.
எனவே, தற்போது இவற்றை முன்னிறுத்தி இலங்கை அதிகாரிகள் அவர்களது சட்ட மற்றும் நிதி ஆலோசகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் பல்வேறு நாடுகளுடனான எமது அனுபவங்களின் அடிப்படையில் நோக்குகையில், யார் கடன் வழங்குநர்கள்? இதில் தொடர்புபட்டிருப்பது என்ன? என்ற விடயங்களை பொறுத்து இச்செயன்முறை பூர்த்தியடைவதற்கான காலப்பகுதி வேறுபடும்.
எனவே, இச்செயன்முறையில் எம்மால் இயன்றவரை நாம் இலங்கைக்கு ஆதரவளித்து வருகின்றோம்.
அதேவேளை இலங்கைக்கான உதவிச்செயற்திட்டங்கள் தொடர்பில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஆசிய முதலீட்டு வங்கி ஆகியவற்றுடன் நாம் நெருங்கிப் பணியாற்றி வருகின்றோம்.
அதேபோன்று இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவடைந்தாலும், இலங்கை இன்னமும் நடுத்தர வருமானம் பெறும் நாடாகவே இருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment