வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண்குழந்தைகள் பெற்ற விவகாரத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி விதிமீறவில்லை என விசாரணை அறிக்கை வெளியான நிலையில், இதுதொடர்பாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு பதிவுகளை பகிர்ந்துள்ளார்.
‘நானும் ரௌடிதான்’ படத்தில் ஒன்றாக பணியாற்றியதன் வாயிலாக பழக்கம் ஏற்பட்டு, பின்னர் 7 வருடங்களாக காதலித்து வந்த நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன், கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு ரஜினிகாந்த், மணிரத்னம், ஷாரூக்கான், விஜய் சேதுபதி, இயக்குநர் அட்லீ, இசையமைப்பாளர் அனிருத் உள்பட பல பிரபலங்கள் வந்து வாழ்த்தினர்.
அதன்பிறகு, மாமல்லபுரத்தில் இவர்களின் திருமணத்திற்காக கடல் பகுதியில் பொதுமக்களை அனுமதிக்கவில்லை என சர்ச்சை கிளம்பியது. பின்னர் திருப்பதி கோயில் சென்று இருவரும் சாமி தரிசனம் செய்தபோது, தடைசெய்யப்பட்ட குறிப்பிட்ட பகுதியில் காலணிகள் அணிந்து சென்றதாக புகார் கிளம்பியது. இதனைத் தொடர்ந்து திருமணம் ஆன நான்கு மாதங்களில் தங்களுக்கு இரட்டை ஆண்குழந்தைகள் பிறந்துள்ளதாக சமூகவலைத்தளம் மூலம் அறிவித்த நிலையில், விதிகளை மீறியதாக இந்த தம்பதி மீது விமர்சனங்கள் எழ ஆரம்பித்தது.
இதனையடுத்து தமிழக அரசின் மருத்துவத் துறை சார்பில் விசாணைக் குழு அமைக்கப்பட்டு, நேற்று விசாரணை அறிக்கையும் வெளியானது. இதில் நயன்தாரா -விக்னேஷ் சிவன் வாடகைத் தாய் விவகாரத்தில் விதிகளை மீறவில்லை என்றும், கடந்த 2016-ம் ஆண்டே இருவரும் பதிவுத் திருமணம் செய்துக்கொண்டதும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு போஸ்ட்களை பகிர்ந்துள்ளார். அதில், “வெறுப்பையும் எதிர்மறையையும் எவ்வளவு விரைவாகப் பரப்புகிறோமோ அவ்வளவு விரைவாக அன்பையும் பரப்பினால், என்ன ஒரு அற்புதமான உலகில் நாம் வாழ்வோம்” என்று கூறியுள்ளார்.
மற்றொன்றில், “ஆரோக்கியம் எப்போதும் மருந்திலிருந்து வருவதில்லை. மன அமைதி, உள்ளத்தில் அமைதி, ஆன்மாவில் அமைதி ஆகியவற்றில் இருந்துதான் பெரும்பாலான நேரங்களில் ஆரோக்கியம் கிடைக்கிறது. மேலும் அது சிரிக்கும்போதும், அன்பிலிருந்தும் வருகின்றது” என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment