இறக்குமதி செய்யப்படும் மருந்து வகைகளில் பெருந்தொகையானவை அத்தியாவசியமற்றவை...!


இறக்குமதி செய்யப்படும் மருந்து வகைகளில் பெருந்தொகையானவை மக்களின் பாவனைக்கு அத்தியாவசியமற்றவை என்றும், ஒரு மருந்து பல வர்த்தக நாமங்களில் இறக்குமதி செய்யப்படுவதால் முறையான கட்டுப்பாடுகள் இல்லாமை பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான குறுகிய மற்றும் நடுத்தர நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான தேசிய சபையின் உப குழு கூட்டத்தின் போது சுட்டிக்காட்டப்பட்டது.

நாட்டு மக்களின் மருந்துத் தேவை மற்றும் அதனைப் பூர்த்தி செய்வதற்கு அத்தியாவசியமான மருந்துப் பொருட்கள் யாவை என்பதை அடையாளம் காண்பதற்கு கொவிட்-19 பெருந்தொற்று பரவலின் போது அமைக்கப்பட்ட உயர்மட்ட தொழில்நுட்பக் குழு ஒன்றை அமைக்க கவனம் செலுத்தப்பட்டது.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று (14) இடம்பெற்ற குழு கூட்டத்தின் போது மேற்கண்டவாறான விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டன.

நாட்டுக்கு மருந்துகளை இறக்குமதி செய்வது மற்றும் விநியோகம் செய்வது தொடர்பான கொள்முதல் நடைமுறைக்கு அதிக காலம் செலவாகுகின்றமை மற்றும் முறையான ஒருங்கிணைப்பு இன்மை தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்தக் கொள்முதல் நடைமுறையினை ஒழுங்குப்படுத்துவது மற்றும் உரிய ஒருங்கிணைப்பை மேற்கொள்வது தொடர்பில் துறைசார் நிபுணர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

நோய்களை தடுப்பதற்கு சுதேச மருத்துவத்தில் நிரூபிக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்தவதற்கான வாய்ப்புக்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இதற்கு மேலதிகமாக இலங்கையில் அதிகமான மருந்துகள் பயன்படுத்தும் இருதய நோய், நீரழிவு, உயர் குருதி அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரோல் போன்ற நோய்களைக் குறைப்பதற்கு பயன்படுத்தக் கூடிய உணவுகள் மற்றும் மாற்று சுதேச மருந்துகளை ஊக்கப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post