ஹட்டன் கினிகத்ஹேன-எபடின் அருவிக்கு கீழ் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று நடந்த இந்த சம்பவத்தில் 34 வயதான நுவன் ரசங்க பிரேமச்சந்திர என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த இளைஞன் தமது வீட்டுக்கு வந்திருந்த உறவினர்கள் சிலருடன் அருவியை பார்க்க சென்றுள்ளார். அப்போது இளைஞன் அருவிக்கு கீழே உள்ள தடாகத்திற்குள் குதித்து நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதனையடுத்து நீரில் மூழ்கிய இளைஞனை மீட்க பிரதேசவாசிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் இளைஞன் நீருக்குள் இருந்து மீட்கப்படும் போது உயிரிழந்து காணப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். பிரேதப் பரிசோதனைகளுக்காக உடல் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மரணம் தொடர்பான விசாரணைகளை கினிகத்ஹேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை மினுவங்கொடை பிரதேசத்தில் பாலம் ஒன்றின் மீதிருந்து அத்தனகல்லு ஓயா ஆற்றில் குதித்த இளம் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளது. 23 முதல் 28 வயது மதிக்கத்தக்க இந்த பெண் ஆற்றில் குதித்த பின்னர், காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆற்றில் குதித்து காணாமல் போன இந்த பெண் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. பாலத்தில் இருந்து குதிக்கும் போது பளுப்பு நிற ஆடையை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. கடற்படையின் சுழியோடிகள், பொலிஸ் உயிர் காப்பு அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போன பெண்ணின் உடலை தேடி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக கம்பஹா பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
அருவியில் குளித்த இளைஞன் பலி-ஆற்றில் குதித்த இளம் பெண்ணை காணவில்லை.
byItrendz Studio
0
Comments
Post a Comment