ஆன்லைன் ஷாப்பிங் மோசடியில் இருந்து தப்பிக்க இதை அறிவது அவசியம்...!


ஆன்லைன் ஷாப்பிங் என்பது அன்றாட வாழ்க்கையின் அங்கமாக மாறி விட்டது. அதே சமயம் இந்த ஆன்லைன் ஷாப்பிங்கில் பல ஏமாற்று சம்பவங்கள் நடைபெறுவதையும் நாம் கேட்டு வருகிறோம்.

ஆர்டர் செய்தது ஒன்று, ஆனால் கிடைத்து வேறொன்று, ஃபோனில் பார்த்தது ஒன்று. ஆனால் நேரில் வேறு மாதிரியாகத் தெரிகிறது, சேதாரம் ஆன பொருள் கிடைத்துவிட்டது, தரம் சரியில்லை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆன்லைன் ஷாப்பிங்கின் போது நாம் முன் வைத்தது உண்டு.

பொதுவாக ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது நாம் கவனித்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன? இது குறித்து சைபர் பாதுகாப்பு நிபுணர் ஸ்ரீராமிடம் பேசினோம். அதிலிருந்து சில தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

முதலில் அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற புகழ்பெற்ற தளமாக பார்த்து ஷாப்பிங் செய்யலாம். ஏனென்றால் இங்கே அவர்களின் 'பிராண்ட் நேம்' என்பது முக்கியமாக கருதப்படும். சில சிறிய தளங்களை தேடி நாம் ஷாப்பிங் செய்யும் போது பணம் விஷயத்தில் ஏமாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதிலும் ஆன்லைனில் கட்டாயம் பணம் செலுத்த வேண்டும் என்று இருக்கும் தளங்களில் நாம் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

இம்மாதிரியான புகழ்பெற்ற தளங்களில் பொருட்களை வாங்கும்போது, திருப்பிக் கொடுக்கும் நடைமுறைகள் மற்றும் ரத்து செய்யும் நடைமுறைகள் குறித்து நன்கு படித்தும் புரிந்து கொள்ள வேண்டியதும் அவசியம். பொதுவாக இவர்களின் வாடிக்கையாளர்களின் சேவையையும் எளிதாக அணுக முடியும்.

சலுகைகளின் தன்மையை அறிவது அவசியம்:

அமேசான் ஃபிளிப்கார்ட் போன்ற தளங்களில் யார் வேண்டுமானாலும் 'விற்பனையாளர்' ஆக இருக்கலாம். இதில் 'வெரிஃபைட் செல்லர்' எனப்படும் சரிபார்க்கப்பட்ட விற்பனையாளர் மற்றும் ரிவ்யூ (மதிப்பாய்வு) என இரண்டு விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். குறிப்பிட்ட விற்பனையாளர் குறித்து அதிக புகார்கள் வந்திருந்தால் நாம் அந்த பொருளை வாங்குவது குறித்து யோசிக்க வேண்டும்.

பல சமயங்களில் நாம் ஆன்லைன் ஷாப்பிங்கை தேடிச் செல்வதற்கு முக்கிய காரணம், அதில் வழங்கப்படும் சலுகைகள். ஆனால் இவ்வாறு ஆஃபர்களில் பொருட்களை வாங்கும்போது நாம் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு பொருளின் விலை ஒரு லட்சம் என்றால் ஏதோ ஒரு தளத்தில் அது 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றால், அப்போது நாம் கவனமாக இருக்க வேண்டும்.

தற்போது பொருளை டெலிவரி செய்ய வரும்போது அவர்களே வாடிக்கையாளர்களிடம் பார்சலை பிரித்துக் காட்டுகின்றனர். அப்படி இல்லையென்றால் வாடிக்கையாளர்கள் அவர்களின் பேக்கேஜ்களை பிரிக்கும்போது வீடியோ ரெக்கார்ட் செய்து கொள்ளலாம். ஏனென்றால் இம்மாதிரியான டெலிவரிகளில் பல நபர்கள் ஈடுபடுகிறார்கள். எனவே தவறு எங்கு வேண்டுமென்றாலும் நடக்கலாம்.



வீடியோ ஆதாரம் அவசியம்:

இம்மாதிரியாக ரெக்கார்ட் செய்யும்போது அது வாடிக்கையாளர்களின் தரப்பில் ஒரு ஆதாரமாக இருக்கும்.

அதேபோன்று பொருட்கள் சேதமடைந்து அது குறித்து நாம் புகார் தெரிவிக்கும்போது இந்த வீடியோக்கள் உதவியாக இருக்கும். வாடிக்கையாளர் தரப்பில் அந்த சேதம் ஏற்படவில்லை என்பதை நிரூபிக்க முடியும்.

சில சமயங்களில் பொருட்களை வாங்கி அதை திரும்ப கொடுக்கும் மோசடிகளும் நடந்துள்ளன எனவே இரு தரப்பிலும் இம்மாதிரியாக பதிவு செய்வது பலன் கொடுக்கும்.

இம்மாதிரி ஷாப்பிங் தளங்களில், ஒரு கட்டம் வரைதான் பொருட்களை பரிசோதிக்க முடியும். ஏனென்றால் அந்த பொருட்கள் அந்த தளத்திற்கு சொந்தமானது இல்லை. அதற்கென பலதரப்பட்ட விற்பனையாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு பொருட்களையும் விரிவாக சோதிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமற்றது.

பலருக்கு ஓடிபி மற்றும் கையெழுத்துக்கள் கேட்கப்படுவது குறித்தும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இந்த ஓடிபி என்பது ஆர்டர் செய்தவரிடம்தான் அந்த குறிப்பிட்ட பொருள் சேருகிறதா என்பதை உறுதி செய்வதற்காக கேட்கப்படுகிறது. கையெழுத்து வாங்குவதும் அதே நோக்கத்திற்காகதான். சில சமயங்களில் முகவரி மாறும் வாய்ப்புகளும் உண்டு. எனவே முகவரியை பதிவிடும்போது நாம் மிக சரியாக பதிவிட வேண்டியது அவசியம்.

Post a Comment

Previous Post Next Post