ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டு நடிகை சமந்தா பகிர்ந்த புகைப்படம் - இதுதான் காரணம் என உருக்கம்...!



தசை அழற்சி நோயால் அவதிப்பட்டு வரும் நடிகை சமந்தா, ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டே ‘யசோதா’ திரைப்படத்திற்கான டப்பிப் பேசும் புகைப்படத்தை பகிர்ந்து உருக்கமான பதிவுடன், விரைவில் மீண்டு வருவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, அறிமுக இயக்குநர்கள் ஹரி-ஹரிஷ் இயக்கியுள்ள ‘யசோதா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சமந்தாவுடன் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா சர்மா உள்பட பலர் நடித்துள்ளனர்.

மணி சர்மா இசையமைத்திருக்கும் இந்தப் படம், வரும் நவம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகின்றது. இதனை முன்னிட்டு, நேற்று முன்தினம் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் பெரும் வரவேற்பு பெற்றது. வாடகைத் தாய் மோசடி குறித்த கதையை கொண்ட இந்தப் படத்தின் ட்ரெய்லர் ட்ரெண்டிங் ஆனது.

இந்நிலையில், நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டு டப்பிங் பேசும் புகைப்படத்தை பகிர்ந்து உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “யசோதா ட்ரெய்லருக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு பெருமகிழ்ச்சி அடைய செய்தது. உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்பும் தொடர்பும் தான், வாழ்க்கை என் மீது வீசும் முடிவில்லாத சவால்களைச் சமாளிக்க எனக்கு வலிமை தருகிறது. சில மாதங்களுக்கு முன்பு எனக்கு Myositis எனப்படும் ஆட்டோ இம்யூன் ( தன்னெதிர்ப்பு நோய்கள்) இருப்பது கண்டறியப்பட்டது.



முழுவதும் குணமடைந்தப் பிறகு இதை உங்களிடம் பகிரலாம் என்று நினைத்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை விட சிறிது காலம் எடுக்கும்போல் தெரிகிறது. நாம் எப்பொழுதும் வலுவான விஷயங்களை மட்டுமே முன்னிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதை நான் இப்போது மெல்ல மெல்ல உணர்கிறேன். இந்த பாதிப்பை ஏற்றுக்கொள்ள, நான் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறேன்.

விரைவில் நான் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனக்கு நல்ல நாட்களும், கெட்ட நாட்களும் உண்டு.... உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும்.... இன்னும் ஒரு நாளைக்கூட என்னால் சமாளிக்க முடியாது என நினைக்கும்போது கூட அந்த நிமிடம் எப்படியோ கடந்து செல்கிறது. இதனால் நான் குணமடைய இன்னும் ஒரு நாள் நெருங்கிவிட்டேன் என்றுதான் அர்த்தம் கொள்கிறேன். உங்களை நேசிக்கிறேன். இதுவும் கடந்து போகும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகைகள் ராஷி கண்ணா, ஸ்ரேயா சரண் உள்பட பலரும் அவருக்கு ஆறுதலுடன் கூடிய நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post