தனது முதல் இரண்டு போட்டிகளில் கடைசிப் பந்துகளில் இந்தியாவிடமும் ஸிம்பாப்வேயிடமும் தோல்வியடைந்த முன்னாள் சம்பியன் பாகிஸ்தான், ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமானால், நெதர்லாந்துக்கு எதிரான இன்றைய சுப்பர் 12 சுற்றில் வெற்றிபெற்றே ஆகவேண்டும்.
குழு 2 இல் தலா 2 தோல்விகளுடன் கடைநிலையில் இருக்கும் பாகிஸ்தானுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான போட்டி பேர்த், மேற்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை (ஒக் 30) பகல் 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் தத்தமது முதலாவது வெற்றியை இலக்கு வைத்து ஒன்றையொன்று எதிர்த்தாடுகின்றன.
'எங்களது ரசிகர்களை போன்று நாங்கள் மிகவும் நொந்துபோயுள்ளோம்' என நேற்று சனிக்கிழமை (ஒக் 29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வேகப்பந்துவீச்சாளர் ஹரிஸ் ரவூப் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
'இந்த சுற்றுப் போட்டி எங்களுக்கு முடிந்துவிடவில்லை. எங்களால் மீண்டு வரமுடியும். இன்னும் மூன்று போட்டிகள் மீதமிருக்கிறது. அவற்றில் நாங்கள் திறமையை வெளிப்படுத்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
எங்களது தவறுகளை நாங்கள் ஆராய்ந்துள்ளோம். அதனை விட நாங்கள் சிறப்பாக விளையாடுவோம். வெளியில் யார் சொல்வதையும் நாங்கள் கருத்தில் கொள்ளாமல், கிரிக்கெட் விளையாட்டில் கவனம் செலுத்துகிறோம்' என்றார்.
நெதர்லாந்து முதல் சுற்றில் திறமையாக விளையாடிய போதிலும், சுப்பர் 12 சுற்றில் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.
எவ்வாறாயினும், ஸிம்பாப்வேயை போன்று அதிசயம் நிகழ்த்த நெதர்லாந்தும் முயற்சிக்கும்.
இதுவரை விளையாடிய போட்டிகளில் பெற்ற அனுபவங்களைக் கொண்டு முழுத் திறமையுடன் நெதர்லாந்து விளையாடினால், பாகிஸ்தான் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.
அணிகள்:
நெதர்லாந்து: மெக்ஸ் ஓ'டவ்ட், விக்ரம்ஜித் சிங், பாஸ் டி லீட், கொலின் அக்கர்மன், டொம் கூப்பர், ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (தலைவர்), டிம் ப்றிங்க்ள், லோகன் வன் பீக், ஷரிஸ் அஹ்மத், ப்ரெட் க்ளாசென், போல் வென் மீக்கெரன்.
பாகிஸ்தான்: பாபர் அஸாம் (தலைவர்), மொஹமத் ரிஸ்வான், ஷான் மசூத், இப்திகார் அஹ்மத், குஷ்தில் ஷா, அசிப் அலி, மொஹமத் நவாஸ், ஷதாப் கான், ஹரிஸ் ரவூப், மொஹமத் வசிம் ஜீனியர், ஷஹீன் ஷா அப்றிடி
Post a Comment