பார்வையற்றோர் பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதி அலுவலகம் முழுமையான ஆதரவை வழங்கும்..!


பார்வையற்றோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதி அலுவலகம் முழுமையான ஆதரவை வழங்கும் என்று ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தையிட்டு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு இன்று (17) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கொடி அணிவிக்கப்பட்டது.



ஜனாதிபதி அலுவலக செலவில் பார்வையற்றோருக்கு 300 வெள்ளை பிரம்புகளைக் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பார்வையற்றோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க முழுமையான ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பார்வையற்றோர் தேசிய சங்கத்தின் செயலாளர் பிரசன்ன விக்ரமசிங்க, இந்த சங்கம் அனைத்து மாகாணத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.



இதேவேளை, பெண்களுக்கான மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் ஒரு கிளையாக பார்வையற்ற பெண்களின் சங்கமும் மாற்றுத்திறனையுடைய இளைஞர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க இளைஞர் சங்கமும் இயங்கி வருவதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இலங்கை தேசிய பார்வையற்றோர் சங்கத்தின் தலைவர் கமல்சிறி நாணயக்கார மற்றும் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சர்வதேச வெள்ளைப்பிரம்பு பாதுகாப்பு தினம் ஒக்டோபர் 15ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post