மேற்கிந்தியத் தீவுகளை ஆரம்பப் போட்டியில் அதிரவைத்த ஸ்கொட்லாந்தினால் இன்றைய தினம் நிர்ணயிக்கப்பட்ட 177 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 19 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 180 ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது.
கேர்ட்டிஸ் கெம்ஃபர், ஜோர்ஜ் டொக்ரெல் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் பகிர்ந்த பெறுமதிமிக்க 119 ஓட்டங்கள் அயர்லாந்தின் வெற்றியை சுலபப்படுத்தியது.
அயர்லாந்து 10 ஓவது ஓவரில் 4 விக்கெட்டை இழந்தபோது மொத்த எண்ணிக்கை 61 ஓட்டங்களாக இருந்தது. இதனால் ஸ்கொட்லாந்து அணியினர் பெரும் உற்சாகம் அடைந்தனர்.
ஆனால், அதன் பின்னர் கேர்ட்டிஸ் கெம்ஃபரும் ஜோர்ஜ் டொக்ரெலும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி அயர்லாந்தின் வெற்றியை உறுதிசெய்தனர்.
அதிரடி வேகத்தில் துடுப்பெடுத்தாடிய கெம்ஃபர் 32 பந்துகளில் 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 72 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழக்காதிருந்தார்.
டொக்ரெல் 27 பந்துகளில் 4 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களைப் பெற்றார்.
அவர்களை விட லோர்க்கன் டக்கர் 20 ஓட்டங்களையும் அணித் தலைவர் அண்டி பெல்பேர்னி, ஹரி டெக்டர் ஆகிய இருவரும் தலா 14 ஓட்டங்களையும் பெற்றனர்.
முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஸ்கொட்லாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது.
ஆரம்ப வீரர் மைக்கல் ஜோன்ஸ் குவித்த அதிரடி அரைச் சதமும் அணித் தலைவர் றிச்சி பெறிங்கடனின் அதிகப்பட்ச பங்களிப்பும் ஸ்கொட்லாந்தை பலமான நிலையில் இட்ட போதிலும் அவர்களது முயற்சி இறுதியில் வீண் போனது.
அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் 77 பெறுமதிமிக்க ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர்.
மைக்கல் ஜோன்ஸ் 55 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 86 ஓட்டங்களைக் குவித்தார். பெறிங்டன் 37 ஓட்டங்களையும் மெத்யூ க்ரொஸ் 28 ஓட்டங்களையும் மைக்கல் லீஸ்க் ஆட்டமிழக்காமல் 17 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் கேர்ட்டிஸ் கெம்ஃபர் 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
Post a Comment