எரிபொருள் இறக்குமதி மோசடிக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம் - மரிக்கார் எச்சரிக்கை...!


நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மிகுதியாக இருக்கும் நிதியையும் அரசாங்கம் மோசடி செய்வது தேசிய குற்றமாகும்.

எரிபொருள் இறக்குமதியில் இடம்பெறும் மோசடிக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.மரிக்கார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஒக் 4) நடைபெற்ற நிதி அமைச்சின் வரிச் சலுகைகள் மற்றும் சில வரிச் சட்டங்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அனைவரும் ஒன்றிணைந்து பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என ஆளும் தரப்பின் உறுப்பினர் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்கிறோம்.

நாடு வங்குரோத்து நிலையை அடைந்து, மந்த போசணையினால் பாதிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில், பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவம் செய்வதாக குறிப்பிடும் ஆளும் தரப்பின் உறுப்பினர், இடம்பெறுகிற ஊழல் மோசடிகளை அறியவில்லை.

எரிபொருள் பெறுகைக்காக க்யூ.ஆர்., முறையை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து எரிபொருள் வரிசை குறைவடைந்ததால், வலுசக்தி அமைச்சரை தற்போது புகழ் பாடுகிறார்கள்.

முச்சக்கர வண்டிகளுக்கு ஒரு வாரத்துக்கு 5 லீற்றர் எரிபொருளும், கார்களுக்கு 20 லீற்றர் எரிபொருளும் க்யூ.ஆர்., முறைமை ஊடாக விநியோகிக்கப்படுகிறது. இதனால் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியுமா?

க்யூ.ஆர்., முறைமை ஊடாக நாட்டு மக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அமோக சலுகை கிடைக்கப் பெறுகின்றன.

இறக்குமதி செய்யப்படும் மசகு எண்ணெய் தொடர்பில் தற்போது பல விடயங்கள் குறிப்பிடப்படுகின்றன. கொரல் என்ற நிறுவனத்திடமிருந்து 4.95 டொலர் அடிப்படையில் மசகு எண்ணெயை பெற்றுக்கொள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கடந்த ஜூலை மாதம் 25ஆம் திகதி மனுகோரலை சமர்ப்பித்தது.

அதனை தொடர்ந்து ஜூலை மாதம் 29ஆம் திகதி வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் மசகு எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார்.

அதில் 8.25 டொலர் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, மசகு எண்ணெய் இறக்குமதி ஊடாக அரச நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் கொள்வனவு ஊடாக அரச நிதி மோசடி செய்யப்படுகிறது. முதல் நாளன்று டொலர் செலுத்த முடியாத மத்திய வங்கி 30 நாட்களுக்குப் பிறகு எவ்வாறு டொலர் செலுத்துகிறது என்பதை மத்திய வங்கியின் ஆளுநர் நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள வேளையிலும், அரசாங்கம் மோசடி செய்வதை தவிர்த்துக்கொள்ளவில்லை. இது தேசிய ரீதியான குற்றமாகும்.

ஆகவே, வலுசக்தி அமைச்சர் டுவிட்டர் செய்தி வெளியிடுவதால் இனியொன்றும் மாறாது. நிச்சயம் நீதிமன்றம் செல்வோம். போராட்டம் நிறைவடையவில்லை.

மக்கள் மத்தியில் போராட்ட எழுச்சி இன்றும் உள்ளது. பசியினால் எழும் போராட்டத்தை இராணுவத்தால் ஒருபோதும் அடக்க முடியாது என்பதை ஜனாதிபதியும் அரசாங்கமும் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.

Post a Comment

Previous Post Next Post