கோவையில் கார் வெடிப்பு;5 பேர் கைது...! திட்டமிட்ட சதியா...!


கோவையில் காரில் கேஸ் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கோவை மாநகரத்தின் முக்கிய பகுதியான கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் நேற்று அதிகாலை கார் வெடித்து அதில் இருந்தவர் பலியானார். 

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று காலை விமானம் மூலம் கோவை வந்தார். தொடர்ந்து அங்கிருந்து காரில் சம்பவ இடமான கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதிக்கு சென்றார். 

அங்கு வெடித்து சிதறிய கார், சேதமான கோட்டை ஈஸ்வரன் கோவிலின் முன்பகுதி, மேலும் விபத்து நடந்த பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட தடயங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வுசெய்தார். பின்னர் இந்த சம்பவம் குறித்து துப்பு துலக்க 6 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். 

இந்த நிலையில், சிலிண்டர் வெடித்து இறந்த ஜமேஷா முபின் சனிக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியேறிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் ஜமேஷா முபின் உள்ளிட்ட 5 பேர் இருக்கின்றனர். அவர் உடன் இருந்தவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஜமேசா முபீன் வீடு இருக்கும் பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த சி.சி.டி.வி.யில் ஜமேசா முபினுடன் சில நபர்கள் இணைந்து ஜமேசா முபின் வீட்டில் இருந்து சில மர்மமான பொருட்களை எடுத்து செல்வது தொடர்பான காட்சிகள் கிடைத்துள்ளன. இது சம்பவம் நடந்த ஞாயிற்றுக்கிழமைக்கு முன்தினமான சனிக்கிழமை இரவு 11.30 மணி அளவில் இது நடந்துள்ளது. 

இதில் ஜமேஷா முபின் வீட்டில் வெடிபொருட்கள் கைபற்றபட்டது தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், அல் உம்மா இயக்க தலைவர் பாட்ஷாவின் தம்பி நவாப் கானின் மகன் முகமது தல்கா. கார் கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நவாப் கான் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டணை கைதியாக சிறையில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கைது செய்யப்பட்டுள்ள அவர்களிடம், அவர்கள் எடுத்து சென்ற பொருள் என்ன? எதற்காக எடுத்து சென்றனர்? இந்த விபத்து இல்லாமல் வேறு ஏதேனும் திட்டத்துடன் அவர்கள் செயல்பட்டுள்ளனரா எனப் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

நன்றி...
தினத் தந்தி

Post a Comment

Previous Post Next Post