பெண்கள் சுதந்திரமாக நடமாட 4 நாட்கள் இரவு திருவிழா - கேரளாவில் புதிய முயற்சி...!


கேரள மாநிலத்தில் இரவு நேரத்தில் பெண்கள் சுதந்திரமாக வெளியில் வரும் வகையில் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவும் தைரியத்தை ஏற்படுத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னோட்டமாக மூவாற்றுப்புழாவில் 4 நாட்கள் இரவு திருவிழா நடத்தப்பட்டது.



"நள்ளிரவில் பெண்கள் நகை அணிந்து தனியாக சுதந்திரமாக பாதுகாப்பாக செல்கின்றனரோ அன்றுதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்" என்று தேசத் தந்தை மகாத்மா காந்தி கூறினார். காந்தியின் கனவை நனவாக்க கேரளாவில் புதுமையான முயற்சி தொடங்கப்பட்டிருக்கிறது. கேரளாவின் மூவாற்றுப்புழா தொகுதி எம்எல்ஏ மேத்யூவின் முயற்சியால் கடந்த 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை மூவாற்றுப்புழாவில் இரவு திருவிழா நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு விழா தொடங்கி இரவு 11.30 மணி வரை நீடித்தது. ஒவ்வொரு நாளும் பெருந்திரளான பெண்கள், மாணவிகள் ஒன்றுகூடி ஊர்வலம், ஆடல், பாடல் என பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

இதுகுறித்து எம்எல்ஏ மேத்யூ கூறியதாவது: பெண்களை கூண்டில் அடைத்து வைக்கக் கூடாது. அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அலுவல், பணி நிமித்த மாக இரவில் வெளியே செல்லும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். மாநிலம் முழுவதும் இதற்கான முன்முயற்சியாக, இரவில் பெண்கள் சுதந்திரமாக சுற்றித் திரிய அழைப்பு விடுத்தோம். 4 நாட்கள் இரவு விழா நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். முதல் விதையை நான் தூவியுள்ளேன். கேரளா முழுவதும் பெண்களுக்காக இதுபோன்ற இரவு விழாக்கள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



மூவாற்றுப்புழா நகர மக்கள் கூறும்போது, “பொதுவாக இரவு நேரத்தில் பெண்கள் வெளியே செல்ல அனுமதிப்பது கிடையாது. இரவு 8.30 மணிக்குள் நகரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுவிடும். முதல்முறையாக 4 நாட்கள் இரவு 11.30 மணி நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. பெண்கள் பாதுகாப்பாக வெளியே சுற்றித் திரிந்தனர். இசை, நடனம், உணவு திருவிழாவும் நடத்தப்பட்டது. ஏராளமான மாணவ, மாணவியருக்கு தற்காப்பு கலை பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இது மறக்க முடியாத அனுபவம்" என்று தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post