உலக நகரங்கள் தினத்தை முன்னிட்டு, கோட்டே, கொட்டுபெம்ம ஈரநிலப் பூங்கா நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் நாளை (31) காலை 9.30 மணிக்கு ஈரநிலப் பூங்கா கேட்போர் கூடத்தில் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
இந்த ஈரநிலப் பூங்கா உலக வங்கியின் உதவியுடன் 2018 நவம்பர் மாதம் நகர அபிவிருத்தி அதிகாரசபையால் நிர்மாணிக்கப்பட்டது. இதற்காக சுமார் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஒக்டோபர் 25ஆம் திகதி துபாயில் இடம்பெற்ற ஈரநிலங்கள் தொடர்பான 13ஆவது ரம்சார் மாநாட்டில் கொழும்பு நகரம் ரம்சார் ஈரநிலமாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி பெத்தகான ஈரநில பூங்கா, தியசரு ஈரநில பூங்கா, ஹீன் கால்வாய் ஈரநில பூங்கா, கொலன்னாவ ஈரநில பூங்கா, கோட்டே மாதின்னாகொட ஈரநில பூங்கா, முல்லேரியா ஈரநில பூங்கா, தலங்கம ஈரநில பூங்கா ஆகியவை இந்த ரம்சார் ஈரநிலங்களுக்கு பூங்காக்களுக்குள் உள்ளடங்குகின்றன.
கோட்டே, கொட்டுபெம்ம ஈரநிலப் பூங்காவின் மொத்த பரப்பளவு 14 ஹெக்டயர் ஆகும். இது பெத்தகான, ஈரநில பூங்காவின் தொடர்ச்சியாகும்.
கோட்டே, கொட்டுபெம்ம ஈர நிலப் பூங்காவின் முதன்மை நோக்கம் பெறுமதி வாய்ந்த ஈரநிலச் சூழலைப் பாதுகாத்து, சேதத்தை குறைப்பதற்கும், சூழலுக்கு உகந்த சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகளுக்கான பூங்காவாக இதைப் பயன்படுத்துவதற்கும் நிலைபேறான அபிவிருத்தியை மேற்கொள்வதாகும்.
பல நீர்வாழ் விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட பல்வேறு பாலூட்டிகளுக்கு உயிர் கொடுக்கும் ஈர நிலம் இதுவாகும். வண்ணத்துப்பூச்சிகள், தும்பிகள், பல்வேறு மீன்கள், பறவைகள், மீன் பிடிப் பூனைகள் (Fishing Cat) போன்ற பல்வேறு விலங்குகளை இங்கு பார்வையிடலாமென நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இங்கு விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்களை அவதானிப்பதன் மூலம் பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மட்டுமின்றி சூழல் ஆர்வலர்களும் அறிவைப் பெற முடியும். இதற்காக பறவைகளை பார்வையிடும் இடமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்காக நடைபாதை மற்றும் வாகன நிறுத்துமிடமும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பூங்காவின் அனைத்து திட்டங்களும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பட்டய கட்டடக்கலைக்கு அமையவே வடிவமைக்கப்பட்டுள்ளன. அனைத்து கட்டுமானங்களும் இயந்திரங்களை பயன்படுத்தாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
மேலும் உலக நகரங்கள் தினத்தை கொண்டாடும் வகையில், நாளை 31ஆம் திகதி முதல், வாரத்தில் ஒரு நாள் சைக்கிளில் வேலைக்குச் செல்லும் திட்டத்தையும் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஏற்பாடு செய்துள்ளது.
வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 'சைக்கிள் வெள்ளிக்கிழமை - சைக்கிளில் வேலைக்குச் செல்வோம்' எனும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், பணியாளர்கள் துவிச்சக்கர வண்டியில் பணிக்கு வருவதற்கு வசதி செய்து தரப்படும் என்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன் ஆரம்ப விழா நாளை காலை 8.15 மணிக்கு பத்தரமுல்லை செத்சிறிபாயவிலுள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் வளாகத்தில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.
துவிச்சக்கர வண்டியில் வேலைக்குச் செல்லும் ஊழியர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் கொள்வனவு செய்வதற்கான நிதி உதவி வழங்குதல், நகர அபிவிருத்தி அதிகார சபையின் துவிச்சக்கரவண்டி சங்கத்தின் அங்கத்தினராகும் வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைக்குமெனவும் நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
துவிச்சக்கர வண்டியில் பணிக்கு வரும் ஊழியர்களின் தமது துவிச்சக்கர வண்டிகளை நிறுத்துவதற்கு அமைச்சின் வளாகத்தில் தனியான இடம் அமைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கு சுகாதார வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
துவிச்சக்கர வண்டியில் பணிக்குச் செல்லுபவர்கள் இலகுவான ஆடைகளை அணிந்து வேலைக்கு வரவும் அனுமதிக்கப்படவுள்ளார்கள்.
அது தவிர, உலக நகரங்கள் தினத்தை முன்னிட்டு மரம் நடுகைத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக, நகர அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment