29 கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் 10 வயது சிறுவன் கைது.

பணம் கொள்ளை உட்பட 29 கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக 10 வயது சிறுவன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜா-எல பொலிஸ் நிலையத்தின் நீதிமன்ற விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் பிரேமசிறி தெரிவித்துள்ளார். மீன் விற்பனையில் ஈடுபடும் ஒருவர் தமது 9 ஆயிரத்து 700 ரூபா பணம் கொள்ளையிடப்பட்டமை சம்பந்தமான செய்த முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொண்ட விசாரணைகளில் இந்த சிறுவன் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. ஜா-எல.ஏக்கல, விகாரை வீதியில் உள்ள வீடொன்றில் வசித்து வரும் சிறுவனிடம் மேற்கொண்ட விசாரணைகளில் 29 கொள்ளை சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளன. சிறுவன் வீடுகளுக்குள் புகுந்து செல்போன்கள், முச்சக்கர வண்டி உதிரி பாகங்கள், மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்களை கொள்ளையிட்டுள்ளதுடன் 300 ரூபா முதல் ஆயிரம் ரூபா வரை கொள்ளையிட்டுள்ளார். 4 ஆம் தரம் வரை கல்வி கற்றுள்ள இந்த சிறுவனின் பெற்றோர் பிரிந்துள்ளதன் காரணமாக பாடசாலை கல்வியை இடையில் நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. சிறுவனிடம் பொலிஸார் மேலதிகமாக மேற்கொண்ட விசாரணைகளில் மீண்டும் பாடசாலைக்கு செல்ல சிறுவன் விருப்பம் தெரிவித்துள்ளார். சிறுவன் தொடர்பில் அறிக்கை ஒன்றை பெற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜா.எல பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கு அமைய பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் பிரேமசிறி, பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் உத்பலா ஆகியோர் சிறுவன் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post