2,500 ஊழியர்கள் பணிநீக்கம்! லாபத்தை அதிகரிக்க பைஜூஸ் நிறுவனம் எடுத்த முடிவு...!



கடந்த வாரம் ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம், 12,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதென்ற அறிவிப்பை வெளியிட்டது. இதேபோல் கூகுள், அமேசான் போன்ற முன்னணி நிறுவனங்களும் கூட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளன. இந்த செய்தி ஊழியர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

கோவிட் பெருந்தொற்று ஏற்பட்ட காலம் முதலே சர்வதேச நாடுகள் அனைத்தும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வந்தது. தற்போது ரஷ்யா - உக்ரைன் போரால் ஏற்பட்ட பாதிப்பும் சேர்ந்துகொள்ளவே, கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு லாபம் ஏற்படவில்லை என்ற தகவல் சிறிய அளவில் விவாதங்களை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது. இதன் தொடர்ச்சியாக, நிறுவனங்கள் வருமானத்தை அதிகரிக்க ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் தற்போது நாட்டின் இணையவழி கல்வி நிறுவனமான(Edutech) பைஜூஸ் வருவாயைப் பெருக்க தனது 2,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய போவதாக அறிவித்துள்ளது. தற்போது 50,000 பேர் தற்போது பைஜூஸ் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். இதில் 5% ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக வெளியான செய்தி ஊழியர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்தாண்டில் சுமார் ரூ.4,588 கோடி நஷ்டத்தை கண்டதாக கூறிய பைஜூஸ் நிறுவனம், 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிதியாண்டின் முடிவில் ரூ.10,000 கோடி வருவாய் என்று தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட் பெருந்தொற்று காலத்தில் உலகமெங்கும் பெரும்பாலானவர் பணி நீக்கம் செய்யப்பட்ட சூழல் கடந்த ஆறுமாதமாகத்தான், சீராக தொடங்கி பரவலாக வேலை வாய்ப்புகள் உருவானது. தற்போது மீண்டும் இந்த பணி நீக்கம் நடவடிக்கைகளை முன்னணி நிறுவனங்கள் எடுக்கும்போது, அது அடுத்தடுத்த நிலைகளில் இருக்கும் நிறுவனங்களிலும் பிரதிபலிக்கும் அபாயம் உள்ளது.



இந்நிலையில் பைஜூஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் திவ்யா கோகுல்நாத் ‘’ அடுத்த ஆறு மாதத்திற்குள் 2,500 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளோம். 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறுவனத்திற்கு வருவாய் அதிகரிப்பு செய்யவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. புதிதாக 10,000 ஆசிரியர்களை பணியமர்த்தம் உள்ளோம். இவர்களை இந்தியா மற்றும் அமெரிக்காவிலிருந்து தான் எடுக்க உள்ளோம். ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் பேசும் சந்தையில் வேலைக்கு அமர்த்துவோம். நிறுவனத்தின் சேவையை லத்தீன் அமெரிக்காவுக்கும் விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

மார்ச் 31, 2021 இல் முடிவடைந்த நிதியாண்டில் பைஜூஸ் ₹ 4,588 கோடி நஷ்டம் என தெரிவித்தது. இது முந்தைய நிதியாண்டை விட 19 மடங்கு அதிகம். 2020 நிதியாண்டில் ₹ 2,511 கோடியாக இருந்த வருவாய் 2021 நிதியாண்டில் ₹ 2,428 கோடியாகக் குறைந்தது. மார்ச் 31, 2022ல் முடிவடைந்த நிதியாண்டில், வருவாய் நான்கு மடங்கு உயர்ந்து, ₹ 10,000 கோடியாக உயர்ந்தது என்று நிறுவனம் கூறியிருந்தது. ஆனால் இந்த காலகட்டத்தில் ஏற்பட்ட லாபம், நஷ்டம் குறித்து எந்த புள்ளி விவரத்தையும் பைஜூஸ் தெரிவிக்கவில்லை.

Post a Comment

Previous Post Next Post