22 ஆவது திருத்தச் சட்டமூல வரைபு பாராளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் - ஜனாதிபதி ஆலோசனை…!


பாராளுமனற அலுவல்கள் தொடர்பான தெரிவு குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபு பாராளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளார்.


சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபில் ஏதேனும் சிக்கல் காணப்படுமாயின் அது தொடர்பில் நீதியமைச்சரிடம் கலந்துரையாடுமாறு ஜனாதிபதி ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

உத்தேச அரசியலமைப்பின் 22அவது திருத்தச் சட்டமூல வரைபு தொடர்பில் ஜனாதிபதிக்கும்,ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை பாராளுமன்ற கட்டத் தொகுதியில் இடம்பெற்றது.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என ஆளும் தரப்பினர் உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டு ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தான் முன்னர் குறிப்பிட்டதை போன்று அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபுக்கு எதிராக வாக்களிப்பதாக குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துரைத்த பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் 22ஆவது திருத்த வரைபுக்கு தனிப்பட்ட தீர்மானத்துக்கமைய எதிராக வாக்களிப்பார்கள் என்றார்.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபு மீதான விவாதம் இன்றும்,நாளையும் இடம்பெறவுள்ளது.திருத்தச் சட்டமூல வரைபு மீதான வாக்கெடுப்பை நாளைய விவாதத்தை தொடர்ந்து நடத்த பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு தீர்மானித்துள்ளது.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்படும். இரட்டை குடியுரிமை உடையவர் இலங்கை பாராளுமன்றில் அங்கம் வகிக்க தகுதியற்றவர் என்பதிலும்,பாராளுமன்றத்தின் பதவி காலம் இரண்டரை வருடத்தை நிறைவு செய்ததன் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்க முடியும் என்ற தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள திருத்தங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.

மக்கள் வாக்கெடுப்புக்கு செல்லாத ஏற்பாடுகளை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்ற அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

அரசியலமைப்பு பேரவைக்கான 3 சிவில் பிரதிநிதிகளை நியமிக்கும் போது பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரின் இணக்கப்பாட்டுடன் நடுநிலையான தன்மையில் நியமித்தல் மற்றும் பாதுகாப்பு அமைச்சை தவிர ஜனாதிபதி வேறு அமைச்சுக்களை வகிக்க கூடாது என எதிர்க்கட்சி தலைவர் முன்வைத்த இரு திருத்தங்கள் 22ஆவது திருத்தச்சட்ட மூல வரைபில் உள்வாங்கப்பட்டுள்ளன.

பாராளுமன்றத்தின் பதவி காலம் நான்கரை வருட காலத்தை நிறைவு செய்ததன் பின்னர் ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைக்க முடியும் என்ற சரத்து அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தில் உள்வாங்கப்பட்டது.

எனினும் 20ஆவது திருத்தச்சட்டத்தில் இது மாற்றப்பட்டு பாராளுமன்றத்தின் பதவி காலம் இரண்டரை வருடத்தை கடந்ததை தொடர்ந்து ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைக்க முடியும் என்ற சரத்து அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூல வரைபில் உள்வாங்கப்பட்டது.

பாராளுமன்றத்தின் பதவி காலம் இரண்;டரை வருடம் கடந்ததன் பின்னர் பாராளுமன்றத்தை ஜனாதிபதியால் கலைக்க முடியும் என்ற ஏற்பாட்டுக்கு எதிர்தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்காத காரணத்தினால் அதனை திருத்த அவதானம் செலுத்தவில்லை.

இரட்டை குடியுரிமையினை உடையவர் இலங்கை பாராளுமன்றத்தில் பதவி வகிக்க தகுதியற்றவர் என்ற ஏற்பாட்;டை திருத்தவில்லை.

பல்வேறு தரப்பினரது கோரிக்கைக்கமைய இரட்;டை குடியுரிமையுடையவர் மீதான தடையில் எவ்வித தடையுமில்லை என நீதியமைச்சர் ஏனைய அரசியல் கட்சிகளுக்கு உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post