மகளிர் ஆசியக் கிண்ண டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி இன்று களத்தில்...!


மகளிர் ஆசியக் கிண்ண டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி இன்று (15) இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.



பங்களாதேஷின் சில்ஹெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இலங்கை மகளிர் அணி ஆரம்ப சுற்றில் இருந்து சிறப்பாக ஆடி பரபரப்பான அரையிறுதியில் பாகிஸ்தானை ஒரு ஓட்ட வித்தியாசத்தில் தோற்கடித்தே இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

எனினும் ஆரம்ப சுற்றில் தோல்வியை எதிர்கொண்ட இந்தியாவுக்கு எதிராகவே இலங்கை அணி இன்று எதிர்கொள்ளவுள்ளது. இந்திய அணி ஆரம்ப சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மாத்திரமே தோல்வியை சந்தித்ததோடு அரையிறுதியில் தாய்லாந்தை இலகுவாக வீழ்த்தியது.

சாமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணியின் ஆரம்ப வீராங்கனை ஹர்ஷதா சமரவிக்ரம சிறப்பாக துடுப்பெடுத்தாடி வருவதோடு, சாமரியும் தமது வழக்கமான ஆடத்திற்கு திரும்பியுள்ளார்.

அதேபோன்று பந்துவீச்சில் இனோகா ரணவீர இந்தத் தொடரில் இரண்டாவது அதிகபட்ச விக்கெட்டுகளாக 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

என்றாலும் மகளிர் டி20 தரவரிசையில் நான்காவது இடத்தில் இருக்கும் இந்திய அணி இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு பெரும் சவாலாகவே இருக்கும். டி20 தரவரிசையில் இலங்கை மகளிர் அணி 8ஆவது இடத்தில் உள்ளது.

எட்டாவது முறையாக நடைபெறும் ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இது ஐந்தாவது தடவை என்றபோதும் அந்த அணி இதுவரை ஒரு தடவையேனும் கிண்ணத்தை கைப்பற்றியதில்லை. அதேபோன்று இலங்கை அணி 14 ஆண்டுகளுக்குப் பின்னரே இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் இந்திய அணி இதுவரை நடந்த மகளிர் ஆசிய கிண்ண தொடர்களில் ஆறில் சம்பியனாகியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு இலங்கை மகளிர்கள் இன்று தனது முழு ஆட்டத்திறனை வெளிப்படுத்துவது அவசியமாகும்.

Post a Comment

Previous Post Next Post