டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டங்கள், மழை காரணமாக அடுத்தடுத்து கைவிடப்படுவது புள்ளிப் பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், ரசிகர்களின் சுவாரஸ்யத்தையும் குறைத்துள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16ம் தேதி தொடங்கியது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் முதலில் நடந்த தகுதிச் சுற்றில் 8 அணிகள் 2 பிரிவுகளாகக் களம் கண்டன. அந்த சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. 2 முறை சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி தகுதிச் சுற்றுடன் வெளியேறியது.
அடுத்ததாக தற்போது சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் இரு பிரிவிலும் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து பலத்த மழை பெய்துவருவதால் பல ஆட்டங்கள் பாதிக்கப்பட்டன. மழை காரணமாக ஆட்டங்கள் அடுத்தடுத்து கைவிடப்படுவது புள்ளிப் பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தையும் குறைத்துள்ளது.
அக்.24: ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தென் ஆப்ரிக்காவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த நிலையில் மழையால் ஆட்டம் கைவிடப்பட்டு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
அக்.26: இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி, 5 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அக்.26: ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து இடையிலான போட்டி மழை காரணமாக 'டாஸ்' கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
அக்.28: ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையிலான ஆட்டம் மழை காரணமாக 'டாஸ்' கூட வீசப்படாமல் ரத்து ஆனது.
அக்.28: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமலே கைவிடப்பட்டது.
இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் மழையால் இதுவரை 4 போட்டிகள் ரத்தாகி உள்ளன. இப்படி தொடர்ச்சியாக பல போட்டிகள் மழையால் கைவிடப்படுவது அணிகளின் வெற்றி வாய்ப்பையும் அரை இறுதி கனவையும் தகர்த்துள்ளது. இதனால் வீரர்களும், ரசிகர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மழையால் ஆட்டம் கைவிடப்படுவதால் அரை இறுதியில் நுழைய 'குரூப்-1' பிரிவில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த பிரிவில் அனைத்து அணிகளுக்கும் 3 போட்டிகள் முடிந்து விட்டன. புள்ளிகள் பட்டியலில் நியூசிலாந்து அணி 5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தி வைத்திருக்கிறது. இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தலா 3 புள்ளிகள் பெற்று, நிகர ரன் ரேட் அடிப்படையில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இதனால் இந்த பிரிவில் எந்த அணிக்கு அரை இறுதி வாய்ப்பு இருக்கிறது என்றே கணிக்க முடியாத சூழல் காணப்படுகிறது. இந்த 3 அணிகளும் இரண்டாவது இடத்திற்கு போட்டாபோட்டியில் உள்ளன. ஒரு பிரிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள்தான் அரை இறுதிக்கு தகுதி பெறும். இந்த பிரிவில் இனி நடைபெறும் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியமானதாகும். அடுத்து வரும் போட்டிகளில் அதிக ரன் ரேட்டுடன் வெற்றிபெறும் அணிக்கே அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
'குரூப்-2' பிரிவில் எல்லா அணிகளும் தலா 2 போட்டிகள் ஆடிவிட்டன. இதில் இந்திய அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய இரு அணிகளும் தலா 3 புள்ளிகள் பெற்று முறையே 2-வது, 3-வது இடங்களில் உள்ளன. இதனால் இந்த இரு அணிகளுமே தனது எஞ்சிய ஆட்டங்களில் அதிக ரன் ரேட்டுடன் வெற்றிபெற்றால் மட்டுமே அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு சாத்தியப்படும். ஒரு போட்டியில்கூட ஜெயிக்காத பாகிஸ்தான் அணி கிட்டத்தட்ட தொடரில் இருந்து வெளியேறிவிட்டது.
ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களிலும் மழை நீடித்துவரும் நிலையில், எஞ்சியுள்ள போட்டிகளாவது திட்டமிட்டப்படி முழுமையாக நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
Post a Comment